Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
கோவை: அதிவேகமாக மரத்தில் மோதிய கார் - 4 இளைஞர்களை காவு வாங்கிய பிறந்தநாள் கொண்டாட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் (20). இவர் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள வாட்டர் வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சபரி அய்யப்பன் (21), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (22) ஆகியோரும் அதே வாட்டர் வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அகத்தியன் (20), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் (19) வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். இவர்கள் 5 பேரும் நண்பர்கள் ஆவர்.
நேற்று ஹரீஷுக்கு பிறந்தநாள். இதனால் நண்பர்கள் 5 பேரும் அவரின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக வாட்டர் வாஷுக்காக வந்த ஒரு காரில், நேற்று இரவு ஐந்து பேரும் சென்றுள்ளனர். பிரகாஷ் காரை ஓட்டியுள்ளார். அப்போது அவர்கள் மது அருந்திவிட்டு காரில் அதிவேகமாக பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

கார் பேரூர் பச்சாபாளையம் அருகே செட்டிப்பாளையம் பிரிவை கடந்த போது, அவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்தது. எதிரில் வந்த ஒரு வாகனத்துக்கு அவர்கள் வழி விட முயற்சி செய்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்து கார், சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மோதியது. கார் அதிவேகமாக சென்று புளியமரம் மற்றும் அதன் அருகில் இருந்த மேஜையில் மோதியது. இதில் காரில் இருந்த ஏர்பேக் ஓபன் ஆனது. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சி செய்தனர்.

ஆனால் பிரகாஷ், ஹரீஷ், சபரி அய்யப்பன், அகத்தியன் ஆகிய 4 சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பிரபாகரன் உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



















