‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறையால் பேரவைத் தோ்தல்கள் முக்கியத்துவம் இழக்கும்: முதல...
கோவை குண்டு வெடிப்பு சம்பவம்; முக்கிய குற்றவாளி பாஷா உயிரிழப்பு!
1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை மாநகரின் 12 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 56 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு அல் உம்மா அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இந்த வழக்கில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ.பாஷா முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.
84 வயதாகும் பாஷா கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் பிணையில் வெளியில் வந்திருந்தார். சுமார் 30 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இதனிடையே 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்திருந்தார்.
இருப்பினும் பாஷா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். பாஷாவின் உடல் தற்போது உக்கடம் பகுதியில் உள்ள மகன் சித்திக் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரின் உடல் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள மசூதியில் நாளை மாலை நல்லடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக கோவை மாநகரில் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.