கோவை: மனைவியை சுட்டுக் கொன்று, தற்கொலை செய்த கணவர் - பின்னணி என்ன?
கோவை அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, கணவரும் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூர் என்கிற பகுதியில் கிருஷ்ணகுமார் - சங்கீதா தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்கள். இந்நிலையில், இன்று காலை கிருஷ்ணகுமார் தன் மனைவி சங்கீதாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். பிறகு அவர் தன் சொந்த ஊரான கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள வண்டாழி ஈரட்டுகுளம் என்கிற பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு தன் வீட்டின் முன்பாக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில், கிருஷ்ணகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

சங்கீதா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சம்பவத்தின் போது, மகள்கள் இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கிருஷ்ணகுமாரின் சடலத்தை பாலக்காடு காவல்துறையினர் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில், கிருஷ்ணகுமார் - சங்கீதா இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இருவருக்கும் பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக கணவன் - மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கிருஷ்ணகுமார் - சங்கீதா தம்பதி உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
