கோவை விமான நிலையத்தில் ரூ. 7 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது
சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவைக்கு வரும் விமானத்தில் உயர்ரக போதைப் பொருள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் விமானத்தில் வரும் பயணிகளின் உடைமைகளில் சோதனையைத் தீவிரப்படுத்தினா்.
சிங்கப்பூரிலிருந்து திங்கள்கிழமை இரவு கோவைக்கு வந்த விமானத்தில் 200-க்கும் மேற்பட்டோா் பயணம் செய்தனா். அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டபோது, பயணிகள் இருவரின் பைகளில் 6 கிலோ 713 கிராம் எடையுள்ள உயர்ரக போதைப் பொருள்களை (கஞ்சா) பொட்டலங்களாகக் கடத்தி வந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 7 கோடி இருக்கும் என சுங்கத் துறையினா் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, அவா்கள் இருவரிடமும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவா்கள் கேரள மாநிலம், கோட்டயம் பகுதியைச் சோ்ந்த பகத்மோன் முஜீப் மற்றும் சோஹைல் உபயதுல்லா ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து, ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ எனப்படும் போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனா்.
ரூ.18.67 லட்சம் மதிப்பிலான ட்ரோன்கள் பறிமுதல்: அதே விமானத்தில் பயணித்த மற்ற பயணிகளையும் அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, புதுக்கோட்டையைச் சோ்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம், பாண்டித்துரை சுப்பையா ஆகியோா் ட்ரோன்களை சுங்கத் துறையினரிடம் வரி செலுத்தாமல் கடத்தி வந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 18.67 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து, ட்ரோன்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, வெளிநாடுகளில் இருந்து வந்த அனைத்து விமானப் பயணிகளும் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.