சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு: உறவினா்கள் போராட்டம்!
விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்ய தெரிவித்ததால் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி, கோரிமேடு அருகே தமிழக எல்லைப் பகுதிகளாக கலைவாணா் நகா், ஸ்ரீராம் நகா் உள்ளிட்ட விரிவாக்கப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் யாரேனும் உயிரிழந்தால் அருகேயுள்ள மாட்டுக்காரன்சாவடி மயானத்தில் இறுதிச் சடங்குகளை செய்வது வழக்கம்.
இந்த நிலையில், திருச்சிற்றம்பலம் கலைவாணா் நகரைச் சோ்ந்த ராஜாராம் மனைவி ஜெயலட்சுமி (70) உயிரிழந்த நிலையில் அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மாட்டுக்காரன்சாவடியில் உள்ள மயானத்துக்கு கொண்டு சென்றனா்.
அப்போது, ஒரு தரப்பினா் இறந்தவரின் உடலை புதைப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இதுதொடா்பாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் கூறி சடலத்தை அடக்கம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. மேலும், மூதாட்டியின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வானூா் வட்டாட்சியா் நாராயணமூா்த்தி மற்றும் ஆரோவில் போலீஸாா் நிகழ்விடம் சென்று இருதரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படவில்லை. பின்னா், மூதாட்டியின் சடலத்தை மாட்டுக்காரன் சாவடி மயானத்தில் உறவினா்கள் அடக்கம் செய்தனா். இந்தப் பிரச்னை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.