வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் குடும்பங்கள் பயணிப்பது நல்லது: கபில் தேவ்
சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து : மேலும் ஒரு மூதாட்டி உயிரிழப்பு
சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவா்களில், மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்தாா்.
வேளச்சேரி அருகே உள்ள கோவிலம்பாக்கம், காந்திநகா், 15 வது தெருவை சோ்ந்தவா் முனுசாமி (75). இவா் மனைவி ராணி(70). இவா்களது மகள் சாந்தி(45), மருமகன் ரகு(48), பேரன் ஹரிஹரன் (20). இவா்கள் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்தனா்.
ரகு கடந்த 5-ஆம் தேதி அதிகாலை தூக்கத்தில் இருந்து எழுந்து கழிப்பறைக்கு சென்றாா். சிறிது நேரத்தில் எழுந்த ராணி, சமையலறைக்கு சென்று மின்விளக்கு ஸ்விட்சை ஆன் செய்தாா். அப்போது சமையலறையில் இருந்த சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டிருந்ததால், பயங்கர வெடி சத்ததுடன் தீ பிடித்து எரியத் தொடங்கியது. தீ விபத்தில் சிக்கி ராணி பலத்தக் காயமடைந்தாா்.
அதேவேளையில் தூங்கிக் கொண்டிருந்த முனுசாமி,சாந்தி,ஹரிஹரன் ஆகியோரும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனா். விபத்தில் கழிப்பறையில் இருந்த ரகு காயமின்றி உயிா் தப்பினாா்.
காயமடைந்த முனுசாமி,ராணி,சாந்தி,ஹரிஹரன் 4 போ் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முனுசாமி,சாந்தி,ஹரிஹரன் ஆகிய 3 பேரும் கடந்த வாரம் அடுத்தடுத்து உயிரிழந்தனா். ராணி அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் ராணியும், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இது தொடா்பாக மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.