சென்னை: தொடர் மழை: பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட குப்பைகள்!
``சர்ஃபராஸ் கானை ஏன் தேர்வு செய்யவில்லை?; கவுதம் கம்பீர் நிலைப்பாடு என்ன?'' - காங்கிரஸ் கேள்வி
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், மதச் சார்புடன் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்றையதினம் (அக்டோபர் 21) வெளியான இந்தியா 'A' அணிக்கான வீரர்கள் பட்டியலில் சர்ஃபராஸ் கான் இடம் பெறாதது கேள்விகளை எழுப்பியுள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் நிலையாக விளையாடி வரும் அவர் தேர்வுக்குழுவால் நியாயமற்றமுறையில் நடத்தப்படுவதாக விவாதங்கள் எழுந்துள்ளன.
கவுதம் கம்பீர் மீது விமர்சனம்
இந்த நிலையில் அவரது பெயரின் பின்னொட்டு 'கான்' என இருப்பதால் அவர் தேர்வு செய்யப்படவில்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ஷாமா முகமது.

"சர்ஃபராஸ் கான் தனது பெயர் காரணமாக தேர்ந்தெடுக்கப்படவில்லையா! #justasking. இந்த விஷயத்தில் கவுதம் கம்பீர் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்." எனப் பதிவிட்டிருந்தார் ஷாமா.
தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பாஜக உறுப்பினராகவும் மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளதைச் சுட்டிக்காட்டி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
Sarfaraz Khan: A அணியிலும் நீக்கம் - ஓவைசி, அஸ்வின் கேள்வி!
சர்ஃபராஸ் கான் கடைசியாக 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார். சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்ட சர்ஃபராஸ் கான், 6 போட்டிகளில் 11 இன்னிங்ஸ் களமிறங்கி 371 ரன்கள் அடித்திருக்கிறார். சராசரி 40. அதிகபட்சமாக 150 ரன்கள் ஒரு போட்டியில் சேர்த்திருக்கிறார்.

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்னதாக எடை குறைத்திருந்தபோதும் அணியில் இடம்பெறவில்லை. தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் A அணியிலும் விலக்கப்பட்டிருக்கிறார்.
முன்னதாக கடந்த செவ்வாய் அன்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) அசாதுதீன் ஓவைசி, உள்நாட்டு போட்டிகளில் நிலையாக விளையாடியபோதும் ஏன் சர்ஃபராஸ் கான் இந்தியா ஏ அணியில் இடம்பெறவில்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், சர்ஃபராஸ் கானுக்காக வருந்துவதாக தெரிவித்ததுடன், "அவரை A அணியில் சேர்க்காவிட்டால் எங்கே சென்று தனது திறமைகளை, முன்னேற்றத்தை நிரூபிப்பார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாததே விவாதங்களை எழுப்பியது. தற்போது A அணியிலும் சேர்த்துக்கொள்ளப்படாதது கடும் அரசியல் விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
Sarfaraz Khan நீக்கம் - அஜித் அகர்கர் விளக்கம்?
இந்த விவகாரத்தில் இந்தியா டுடே நிறுவனம் கூறுவதன்படி, சர்ஃபராஸ் கான் காயம் காரணமாக தேர்வு செய்யப்படவில்லை என கடந்த மாதம் விளக்கம் அளித்திருக்கிறார் தேர்வுக்குழுவின் தலைவர் அஜித் அகர்கர். தொடையில் உள்ள காயம் காரணமாக துலீப் கோப்பை மற்றும் இரானி கோப்பையிலும் அவர் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் சர்ஃபராஸ் கான் வருகின்ற ரஞ்சி கோப்பையில் தன்னை நிரூபிக்க முனைப்புடன் இருக்கிறார். அவர் 56 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இன்னிங் 65.19 ரன்கள் ஆவெரேஜ் உடன் நிலையான பங்களிப்பைச் செலுத்தும் வீரராக இருந்து வருகிறார்!