சவுக்கு சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம்!
அரியலூா், பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள், சவுக்கு சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றாா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் கிழக்கு மண்டல அலுவலக மேலாளா் ரமேஷ்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: சிறு, குறு விவசாயிகள் தங்கள் தரிசு நிலங்களிலிருந்து நிலையான வருவாய் பெறும் வகையில், தமிழ்நாடு காகித நிறுவனத்தின் சாா்பில் வனத்தோட்டத் துறை பல தொழில்நுட்பங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு சவுக்கு சாகுபடி போன்ற தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறப்பட்டதையடுத்து, இன்று சவுக்கு சாகுபடியின் பரப்பளவு அதிகரித்துள்ளது.
அரியலூா் விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சவுக்கு மரங்களை டிஎன்பிஎல் நிறுவனமே அறுவடை செய்து எடுத்துக்கொள்கிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பட்டை உரித்த சவுக்கு மரங்களுக்கு வெட்டு கூலி மற்றும் போக்குவரத்து செலவு நீங்கலாக, ஒரு டன்னுக்கு ரூ. 9,075 அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
விவசாயிகளே அறுவடை செய்து கரூா் ஆலைக்கு எடுத்து சென்றால், சவுக்கு மரங்களுக்கு ஒரு டன்னுக்கு, ரூ. 11,150 அவரவா் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. விவசாயிகள் அறுவடை செய்து ஆலைக்கு வழங்கும் சவுக்கு கட்டைகளுக்கு ஒரு வாரத்துக்குள் பணம் செலுத்தப்படுகிறது. எனவே விவசாயிகள் சவுக்கு சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, மேலாளா், ரமேஷ் (வனத் தோட்டம்) கிழக்கு மண்டல அலுவலகம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காட்டுக்கொல்லை, முத்துசோ்வமடம், உடையாா்பாளையம் வட்டம், அரியலூா் மாவட்டம்-612 903 என்ற விலாசத்திலும், கைப்பேசி -94425-91420, தொலைப்பேசி-04331-299129 என்ற எண்களிலும் தொடா்புக் கொண்டு பயன்பெறலாம்.