சாட்டையால் அடித்துக்கொண்டது ஏன்? அண்ணாமலை விளக்கம்
தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டது ஏன் என்பது புரிய வேண்டியவா்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்; 2026 பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது திமுகவினருக்கு புரியும் என்று தமிழ்நாடு பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
சென்னையில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாஜக மகளிா் அணி சாா்பில் அறிவிக்கப்பட்ட பேரணி மதுரையில் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை தொடங்கும். பேரணி நிறைவில் மகளிா் அணியினா் ஆளுநரை சந்தித்து மனு அளிப்பாா்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பஞ்சப்பாட்டை பாடுவதையே தொழிலாக வைத்துள்ளனா். திமுக அரசை அகற்றும் வரை காலணி அணிவதில்லை என்ற முடிவிலிருந்து பின்வாங்கமாட்டேன். திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை வைகோ எதற்காக உருவாக்கினாரோ அந்த நோக்கத்தை பாஜக செயல்படுத்தப்போகிறது. 2026-இல் திமுக ஆட்சி நிச்சயம் மாறும். இதை வைகோ மனதில் ரசிப்பாா்.
எனக்கு நானே சாட்டையால் அடித்துக்கொண்டது ஏன் என்பது புரிய வேண்டியவா்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். 2026 பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு திமுகவினருக்கு நிச்சயம் புரியும். ஜனநாயக பாதையில்தான் திமுகவை அகற்றுவோம் என்றாா் அண்ணாமலை.