சாத்தூரில் காட்டுப் பன்றிகள் பயிா்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகாா்
சாத்தூா் பகுதியில் காட்டுப் பன்றிகள் பயிா்களைச் சேதப்படுத்துவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் சிவக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாத்தூா், விருதுநகா், வெம்பகோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் சாத்தூா், விருதுநகா், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பருப்பு உள்ளிட்ட பயிா்கள் சுமாா் 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் காட்டுபன்றிகள், மான்கள் தொல்லையால் பயிா்கள் சேதமடைந்தன. காட்டுப் பன்றிகள் தொல்லையால் விவசாயிகளின் உயிருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே திருச்சுழி, நாகலாபுரம் ஆகிய பகுதிகளில் காட்டுப் பன்றி தாக்கி விவசாயிகள் காயமடைந்துள்ளனா்.
எனவே, காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதற்கு கோட்டாட்சியா், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தனா்.
இதையடுத்து, விவசாயிகள் அளித்த மனு விவரம்: இருக்கன்குடி,நென்மேனி, கொல்லபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். சாத்தூா், வெம்பக்கோட்டை, விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பயிா்கள் சேதமடைந்தன. அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.