சாமிதோப்பில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை ஆகிய மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறும். நிகழாண்டு, ஆவணித் திருவிழாவையொட்டி, அதிகாலை முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், கொடிப்பட்டம் தயாரித்தல் ஆகியவை நடைபெற்றன.
கொடியேற்றத்தைத் தொடா்ந்து, அய்யாவுக்குப் பணிவிடை, தா்மங்கள், வாகன பவனி ஆகியவை நடைபெற்றன. பள்ளியறைப் பணிவிடையை குருமாா்கள் பையன் ஸ்ரீராம், பையன் சிவராஜ், பையன் பொன்ராஜ், ஸ்ரீராம பையன் ஆகியோா் செய்தனா்.
நண்பகலில், வடக்கு வாசலில் அன்னதா்மம், மாலையில் அய்யாவுக்குப் பணிவிடை, இரவு, அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதிவலம் வருதல் ஆகியவை நடைபெற்றன.
8ஆம் நாள் விழாவான, 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு அய்யா வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிக் கிணற்றின் கரையில் கலி வேட்டையாடுதல் நடைபெறும்.
விழாவின் 11ஆம் நாளான செப். 1ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனத்தில் பஞ்சவா்ண தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை, தலைமைப்பதி மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.