சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டி: ரியல் மாட்ரிட் கம்பேக் தருமா?
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் கட்ட காலிறுதிப் போட்டியில் தோல்வியுற்ற ரியல் மாட்ரிட் அணி 2ஆம் கட்ட ஆட்டத்தில் கம்பேக் அளிக்குமென அதன் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணிக்கு சாம்பியன்ஸ் லீக்கில் கடினமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
இந்தத் தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றிலேயே கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்துள்ள ரியல் மாட்ரிட் அணி காலிறுதியின் முதல்கட்ட ஆட்டத்தில் 0-3 என ஆர்சனல் உடன் தோல்வியுற்றது.
காலிறுதியின் இரண்டாம் கட்ட போட்டி ஏப்.17ஆம் தேதியில் ஆர்சனல் உடன் ரியல் மாட்ரிட் மோதுகிறது.
கம்பேக் கிங்ஸ் ரியல் மாட்ரிட்
ரியல் மாட்ரிட் அணியை கம்பேக் கிங்ஸ் மாட்ரிட் என ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள். அவர்களது சமீபத்திய ஃபார்மும் அப்படித்தான் இருக்கின்றன.
2022இல் அரையிறுதியின் முதல்கட்ட ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி உடன் 3-4 என பின் தங்கியிருந்தது. பின்னர், 2ஆம் கட்ட ஆட்டத்தில் 3-1 என கூடுதல் நேரத்தில் கோல் அடித்து வென்றது.
இப்படியாக பலமுறை கம்பேக் கொடுத்திருக்கும் ரியல் மாட்ரிட் அணி ஏப்.17ஆம் தேதி வெற்றிபெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
கம்பேக் தருவோம் - கார்லோ அன்செலாட்டி
இது குறித்து ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி சமீபத்தில், “ரியல் மாய்ரிட் அணி மட்டுமே இப்படியான கம்பேக்கை பலமுறை கொடுத்திருக்கிறது. அதை மீண்டும் ஒருமுறை செய்ய முயற்சிப்போம்.
எங்களது ரசிகர்களும் திடலும் இதற்கு உதவுகிறார்கள். கடைசி நிமிஷம் வரை நாங்கள் முயற்சிப்போம்” எனக் கூறியுள்ளார்.
ரியல் மாட்ரிட் அணியின் மிட் ஃபீல்டர் கமவிங்கா ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால் இந்தப் போட்டியில் விளையாடாமல் போவது அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஆர்சனல் அணி 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இருக்கிறது.