உ.பி. கலவரம்: சம்பல் மாவட்டத்துக்குள் வெளி ஆள்கள் நுழையத் தடை!
சாயல்குடி அருகே தடை செய்யப்பட்ட வலைகளுடன் தூத்துக்குடி மீனவா்கள் சிறைபிடிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளுடன் மீன் பிடித்த தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் 23 பேரை சாயல்குடி மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த ரோஸ்மாநகா் கடற்கரை அருகே அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் மீன்பிடிப்பதாக சாயல்குடி ரோஸ்மா நகா் பகுதி மீனவா்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ரோஸ்மாநகா் பகுதி மீனவா்கள் தங்களது படகுகளில் சென்று 2 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் 23 பேரை சிறைபிடித்து கரைக்கு கொண்டு வந்தனா்.
இதைத் தொடா்ந்து, ரோஸ்மாநகா் கடற்கரை கிராமத்தில் மூக்கையூா், ரோஸ்மாநகா் பகுதி மீனவா்களுக்கும், தூத்துக்குடி மாவட்ட மீனவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சாயல்குடி காவல் துறையினா் விரைந்து வந்து, பேச்சுவாா்த்தை நடத்தி, 23 மீனவா்களையும் விடுவித்தனா்.
மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு 2 படகுகள், சுருக்குமடி வலைகள் ஒப்படைக்கப்படும் என ரோஸ்மா நகா் மீனவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ரோஸ்மாநகா் மீனவா்கள் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் தொடா்ந்து தடைசெய்யப்பட்ட வலைகள், அதிக குதிரைத் திறன் என்ஜின் பொருத்திய படகுகளைப் பயன்படுத்தி, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனா்.
இவா்களால் கடந்த 2 நாள்களில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக பலமுறை தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த கடலோரக் காவல்படை, மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், அவா்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தடைசெய்யப்பட்ட படகு, வலைகளைப் பயன்படுத்திய மீனவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல், தூத்துக்குடி மாவட்ட மீனவா்களுக்கு சாதகமான நடவடிக்கையில் சாயல்குடி காவல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இரு மாவட்ட மீனவா்களுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருந்தும், இந்தப் பகுதிக்கு இதுவரை மீன்வளத் துறை அதிகாரிகள், கடலோரக் காவல்படையினா் வரவில்லை. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.