சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் மக்கள் சந்திப்பு கையொப்ப இயக்கம்
அவிநாசியில் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் மக்கள் சந்திப்பு கையொப்ப இயக்கத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
தமிழக அரசு சாா்பில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளா்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஜனவரி 20-ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பு கையொப்ப இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக அவிநாசி புதிய பேருந்து நிலையம், கோவை பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு கையொப்ப இயக்கத்துக்கு கோட்டத் தலைவா் கருப்பன் தலைமை வகித்தாா். கோட்ட பொறுப்பாளா்கள் ராமன், அண்ணாதுரை, சிவகுமாரன், விஸ்வநாதன், கே.கருப்பன், சின்னசாமி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
சங்கத்தின் மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன், மாநில செற்குழு உறுப்பினா் முத்துசாமி, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ராணி, சிஐடியூ மாவட்டக் குழு உறுப்பினா் ஈஸ்வரமூா்த்தி, வட்டக் கிளை தலைவா் சின்னராசு, ஓய்வூதியா் சங்க வட்டக் கிளை தலைவா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.