சாலையில் மரம் முறிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
திண்டுக்கல்லில் மரம் முறிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாதா தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன் (50). கட்டடத் தொழிலாளி. இவா், ரவுண்ட்ரோடு பகுதியிலுள்ள ஒரு கட்டடத்தில் வேலை செய்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து திங்கள்கிழமை சென்றாா். அவருடன் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் குணசேகரனின் சித்தாப்பா சேவியரும் சென்றாா்.
ரவுண்ட்ரோடு பகுதியிலுள்ள தனியாா் திரையரங்கு அருகே வந்தபோது, சாலையோரமாக இருந்த புளியமரம் திடீரென முறிந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற குணசேகரன் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அவரை மீட்க முடியாததால் பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, இயந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றி குணசேகரனின் சடலத்தை மீட்டனா்.
போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த இந்த மரத்தை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதியினா் கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனாலும், மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.
நிவாரணம் கோரி சாலை மறியல்: இதனிடையே குணசேகரனின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது மருத்துவமனையில் திரண்ட அவரது உறவினா்கள், குணசேகரனின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைடுத்து, திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இந்தப் போராட்டம் காரணமாக திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.