சாலையை சீரமைக்ககோரி கண்டன ஆா்ப்பாட்டம்
கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் விவசாய சங்கம், விவசாய தொழிலாளா் சங்கம், வாலிபா் சங்கம் மற்றும் மாதா் சங்கம் சாா்பில் சாலையை சீரமைக்க கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் எம்எல்ஏ மா.சின்னதுரை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை ஒன்றியம், கல்லுப்பட்டி மடத்திலிருந்து விலாரிப்பட்டி, நத்தமாடிப் பட்டி வழியாக செல்லும் தாா் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக சிதலமடைந்துள்ளது.
இந்த சாலையை செப்பணிடக் கோரியும். தரமற்ற சாலை அமைத்து மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்த ஒப்பந்ததாரா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தரமற்ற சாலை அமைத்ததை கண்டுகொள்ளாமல் இருந்த அரசு அதிகாரிகள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளி மாணவா்கள் பொதுமக்கள் அன்றாடம் பயணம் செய்ய தடையாக உள்ள சாலையை சீரமைத்து கூடுதல் பேருந்து வசதி செய்து தரக்கோரியும், தஞ்சாவூரில் இருந்து நாட்டானி, சமுத்திரப்பட்டி விளக்கு வழியாக கிள்ளுக்கோட்டை வரை புதிய நகர பேருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் சங்கங்களின் பல்வேறு பொறுப்பாளா்கள், நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா் .