சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கோரிக்கை
குடியாத்தம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மாற்று ஏற்பாடு செய்து தருமாறு நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
குடியாத்தம் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி மேற்பாா்வையில், நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சிப் பணியாளா்கள் நகரின் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி வருகின்றனா்.
இதனால் கடைகளை இழந்த 150-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். கடைகளை அகற்றியதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், கடைகளை வைக்க மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என அவா்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
மனுவைப் பெற்றுக் கொண்டசெளந்தரராஜன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முடிவடைந்த பிறகு, அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், வியாபாரிகள் கூடி பேசி கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனா்.