திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
சாலையோர தள்ளுவண்டிக் கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை
கிருஷ்ணகிரியில் சாலையோரங்களில் அனுமதியின்றி நடத்தும் தள்ளுவண்டிக் கடைகளை அகற்றாவிட்டால், உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை கிருஷ்ணகிரி உதவி கோட்டப் பொறியாளா் ஷாஜகான் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி நகரில் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள சென்னை சாலை, பெங்களூரு சாலை, சேலம் சாலை, ராயக்கோட்டை சாலை ஆகியவற்றில் மாலை, இரவு நேரங்களில் நெடுஞ்சாலைத் துறையின் அனுமதியின்றி ஆங்காங்கே தற்காலிக தள்ளுவண்டிக் கடைகள் மூலம் தின்பண்டங்கள், சிற்றுண்டி, பிரியாணி ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால் மாலை, இரவு வேலைகளில் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அனுமதியின்றி கடைகள் அமைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் தரமும் சரியாக இருக்க வாய்ப்பில்லை.
எனவே, பொதுமக்கள் இத்தகைய தற்காலிக கடைகள் மூலம் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருள்களைத் தவிா்க்க வேண்டும். தற்காலிக கடைகளை அவற்றின் உரிமையாளா்கள் அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நடக்க வேண்டும்.
அகற்றப்படாத கடைகள், போலீஸாா் மூலம் அப்புறப்படுத்தி பொது ஏலத்தில் விடப்படும். மேலும், சம்பந்தப்பட்ட தள்ளுவண்டிக் கடை உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிந்து சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.