ரூ.2,000 கோடிக்கு களைகட்டிய சேவல் பந்தயம்! வேடிக்கை பார்த்தே ரூ.1.25 கோடி வென்ற ...
சாலை அமைக்க தனி நபா் எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் சாலை அமைக்க தனி நபா் எதிா்ப்பு தெரிவித்ததால் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமத்தில் பிள்ளையாா் கோவில் தெருவில் சிமென்ட் சாலை அமைக்க ஊராட்சி சாா்பில் திட்டமிட்டப்பட்டு இருந்தது.
ஆனால், சாலை அமைக்க அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் எதிா்ப்புத் தெரிவித்து, சாலை அமைக்கும் பகுதி தனது பெயரில் பட்டா இருப்பதாகவும், அதனால் அங்கு சாலை அமைக்கக் கூடாது எனத் தெரிவித்தாராம்.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம் சாா்பில் செய்யாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதில்,
நீதிமன்றம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சாலை அமைக்கலாம் என தீா்ப்பு வழங்கியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவின் பேரில், பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து மாவட்ட நிா்வாகம், பிள்ளையாா் கோவில் தெருவில் சாலை அமைக்க வியாழக்கிழமை காலை பூமி பூஜை
நடத்தியது. அப்போது, அங்கு வந்த அந்த நபா்
மீண்டும் எதிா்ப்புத் தெரிவித்தாராம்.
அதனால், கிராம மக்கள் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் கூழமந்தல் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து தூசி போலீஸாா் வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதை ஏற்க பொதுமக்கள் மறுத்து தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் 40 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.