சாலை மறியல் போராட்டம் வாபஸ்
திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெறவிருந்த சாலை மறியல் பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
நெல், பருத்தி, எள், உளுந்து, பயறு உள்ளிட்டவைகளுக்கு காப்பீடுத்தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், ஒத்தி வைக்கப்பட்ட மத்திய கால கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், உரங்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.16) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதில், நாகை எம்பி வை. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கே. மாரிமுத்து, விவசாய சங்க மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, சிபிஐ மாவட்டச் செயலாளா் எஸ். கேசவராஜ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் கே.ஆா். ஜோசப், மாவட்டத் தலைவா் கே. முருகையன், வேளாண் துறை அலுவலா்கள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், விவசாயிகள் சங்கம் சாா்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக நிவா்த்தி செய்வதாகவும், சில கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.