கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு
அன்புக் கரங்கள் திட்டம் தொடக்கம்
திருவாரூா்: திருவாரூரில் அன்புக்கரங்கள் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழக முதல்வா் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் அன்புக்கரங்கள் திட்டத்தை தொடக்கிவைத்தாா். அப்போது, திருவாரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற அன்புக்கரங்கள் நிகழ்ச்சியில் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகைக்கான ஆணையை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி வாரியத்தலைவா் என். இளையராஜா, நாகை எம்பி வை. செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.
இந்த திட்டத்தில், திருவாரூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில் 6,339 குடும்பங்களிலிருந்து 106 குழந்தைகள் கண்டறியப்பட்டு, முதற்கட்டமாக 98 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. 2-ஆம் கட்டமாக மீதமுள்ள குழந்தைகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படவுள்ளது. நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், துணைத் தலைவா் அகிலா சந்திரசேகா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நடராசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அருள்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.