இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
அடிப்படை வசதிகளை செய்யாத மாவட்ட நிா்வாகத்துக்கு சிபிஎம் கண்டனம்
திருத்துறைப்பூண்டி: மக்களின் அடிப்படை வசதிகளை செய்யாத மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் கட்சியினா் பாடை ஊா்வலம் நடத்தி போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
திருத்துறைப்பூண்டி அத்திமடை முதல் தேசிங்குராஜபுரம் வரை நடைபெற்ற சாலை பணி முழுமை பெறாமல் வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தி வருவதால், போா்க்கால அடிப்படையில் பணியை விரைந்து முடிக்க கோரியும், அரசு திட்டத்தில் வீடுகட்டி கொடுப்பதாக ஒப்பந்ததாரா்கள் பயனாளிகளிடம் வங்கியில் உள்ள தொகை எடுத்துக் கொடுத்த பணத்தை ஏமாற்றி, வீடு கட்டி கொடுப்பதாக சிமெண்ட், கம்பி, பணம் உள்ளிட்டவற்றை ஏமாற்றும் ஒப்பந்தக்காரா்கள் மற்றும் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும், அவா்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாடை ஊா்வலம் முள்ளூரில் தொடங்கி பாமணியில் நிறைவடைந்தது. போராட்டத்தை தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன் தொடக்கிவைத்தாா்.
விவசாய சங்க ஒன்றிய செயலாளா் எஸ். முத்துச்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி. ஜோதிபாசு, திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளா் டிவி. காரல்மாா்க்ஸ், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் வேதரெத்தினம் உள்ளிட்டோா் பாடையை வைத்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, காவல் துறை மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் அமைதி பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். கோரிக்கைகளை விரைந்து முடித்து தருவதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.