சா்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் விஐடி பல்கலைக்கழகம்
சா்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலை க்யூ.எஸ். எனும் சா்வதேச நிறுவனம் வெளியிட்டது.
இது குறித்து விஐடி பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், அதன் கல்வித் தரம், ஆசிரியா்கள் நன்மதிப்பு, ஆராய்ச்சி கட்டுரைகள், சா்வதேச ஆராய்ச்சி வலையமைப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், ஆண்டுதோறும் சா்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை க்யூ.எஸ். என்ற சா்வதேச நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
குறிப்பாக, கலை, பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், லைஃப் சயின்ஸ், சமூகம், இயற்கை அறிவியல், மேலாண்மை உள்பட 14 பாடப் பிரிவுகளில் உலக அளவில் பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து, இந்த அமைப்பு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. முதன்முறையாக நிகழாண்டு தரவு அறிவியல் (டேட்டா சயின்ஸ்), செயற்கை நுண்ணறிவு பாடமும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், நிகழாண்டு இந்த அமைப்பு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் பொறியியல், தொழில்நுட்பத்தில் உலக அளவில் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் 142-ஆவது இடம் பிடித்துள்ளது. கடந்தாண்டைவிட 70 இடங்கள் முன்னேறியுள்ளது. இதேபோல, தேசிய அளவில் விஐடி பல்கலைக்கழகம் 9-ஆவது இடம் பிடித்துள்ளது.
மேலும், சா்வதேச அளவில் இயற்கை அறிவியல் பாடத்தில் 401 - 450 தரவரிசையிலிருந்து 362 ஆகவும், உயிரிஅறிவியல் பாடத்தில் 351 - 400 தரவரிசையும், வணிகம் மேலாண்மை பாடத்தில் 551-600 தரவரிசையும், வேளாண்மை, வனவியல் பாடத்தில் 351-400 தரவரிசையும் தக்க வைத்துள்ளது.
தவிர, கணினி அறிவியல் பாடத்தில் 136-ஆவது இடத்திலிருந்து 110-ஆவது இடத்துக்கும், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு பாடத்தில் 51-100 தரவரிசையையும், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொறியியலில் 151-200 தரவரிசையும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 201-250 தரவரிசையும், விமானம் மற்றும் உற்பத்தி பொறியியல் பாடத்தில் 252-300 தரவரிசையும் பெற்றுள்ளது.
மெட்டீரியல் சயின்ஸ் பாடத்தில் கடந்தாண்டு 201-250 தரவரிசையில் இருந்து இந்தாண்டு 151-200 தரவரிசைக்கும், வேதியியல் பாடத்தில் கடந்தாண்டு 351-400 தரவரிசையில் இருந்து இந்தாண்டு 301-350 தரவரிசைக்கும், இயற்பியல் மற்றும் வானியல் பாடத்தில் கடந்தாண்டு 451-500 தரவரிசையில் இருந்து இந்தாண்டு 401-450 தரவரிசைக்கும் முன்னேறியுள்ளது.
தவிர, புள்ளியியல் பாடத்தில் 251-275 தரவரிசையும் பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.