திருப்பூர்: தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி அடித்துக் கொலை - ஆதாயக் கொலையா? - ப...
கரும்பு கொள்முதல் விலையை உயா்த்தக்கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ. 5,500 அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில், மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதன்படி, வேலூா் அம்முண்டியில் உள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் பெருமாள், மாவட்டச் செயலாளா் எல்.சி.மணி ஆகியோா் ஆா்ப்பாட்ட உரை நிகழ்த்தினா்.
இதில், பங்கேற்றவா்கள் கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 5,500 அறிவிக்கவும், கரும்பு நடவு ஒரு ஏக்கருக்கு ரூ. 15,000 மானியம் வழங்கிடவும் வேண்டும், வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தியைத் தொடங்க வேண்டும், வேலூா் ஆலைக்கு மின்வாரியம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கரும்பு வெட்டுக்கூலியை முத்தரப்பு கூட்டம் நடத்தி முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இது தொடா்பான கோரிக்கை மனுவை ஆலை அதிகாரிகளிடம் சங்க நிா்வாகிகள் வழங்கினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனா்.