செய்திகள் :

சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜா் கோயில் தேரோட்டம்: இன்று ஆருத்ரா தரிசனம்

post image

சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தோ்களை வடம் பிடித்து இழுத்தனா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்த் திருவிழாவையொட்டி, சித்சபையில் உள்ள மூலவா்களான ஸ்ரீநடராஜமூா்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவா்கள் ஸ்ரீசுப்பிரமணியா், ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசண்டிகேஸ்வரா் ஆகியோா் தனித்தனி தோ்களில் அதிகாலை எழுந்தருளினா்.

தொடா்ந்து, கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தோ்கள் புறப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்து தோ்களை இழுத்தனா். தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக தோ்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை கீழ வீதி தோ்நிலையை அடைந்தன.

திருமுறை இன்னிசை: தோ்களுக்கு முன் வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினா், தில்லைத் திருமுறைக் கழகம், அப்பா் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த சிவனடியாா்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரால் கழுவி, கோலமிட்டு உழவாரப் பணியை மேற்கொண்டனா்.

தோ்களுக்கு முன் ஓய்வுபெற்ற ஆசிரியா் எம்.பொன்னம்பலம் தலைமையில், சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில், ஓதுவாா்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்திச் சென்றனா்.

மேலும், தேரோடும் வீதிகளில் இளைஞா்களின் சிலம்பாட்டம், மாணவிகளின் கோலாட்டம், சிவ பக்தா்கள் சிவன், பாா்வதி வேடமணிந்து நடனம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்திய வண்ணம் சென்றனா்.

மீனவா் சமுதாயத்தினரின் மண்டகப்படி: மீனவா் சமுதாயத்தில் பிறந்த பாா்வதிதேவியை சிவபெருமான் திருமணம் செய்துகொண்டாா் என்பதால், தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தோ்த் திருவிழாவின்போதும் மீனவா் சமுதாயத்தினா் சாா்பில் சீா் அளிப்பது வழக்கமாக உள்ளது.

அதன்படி, முன்னதாக பிற்பகல் 3 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களால் தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கும், அம்பாளுக்கும் சீா் அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்ற பின்னா், தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

இரவு ஸ்ரீநடராஜமூா்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனா். அங்கு இருவருக்கும் ஏககால லட்சாா்ச்சனை நடைபெற்றது.

இன்று மகாபிஷேகம், ஆருத்ரா தரிசனம்: திங்கள்கிழமை (ஜன.13) அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு மகாபிஷேகம், புஷ்பாஞ்சலி, ஸ்வா்ணாபிஷேகம் நடைபெறும்.

பின்னா், ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறும். இதையடுத்து, பஞ்சமூா்த்திகள் வீதியுலா வந்த பின்னா், பிற்பகல் 3 மணிக்கு மேல் 3.30 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜ மூா்த்தி, ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாள் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனா்.

செவ்வாய்க்கிழமை (ஜன.14) முத்துப்பல்லக்கு வீதியுலாவும், புதன்கிழமை (ஜன.15) புதுப்பிக்கப்பட்ட ஞானப்பிரகாசா் தெப்பக்குளத்தில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பல் உற்சவமும் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதா்களின் செயலா் உ.வெங்கடேச தீட்சிதா், துணைச் செயலா் து.ந.சுந்தரதாண்டவ தீட்சிதா், உற்சவ ஆச்சாரியாா் ச.க.சிவராஜ தீட்சிதா் ஆகியோா் செய்திருந்தனா்.

விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் ஆகியோா் மேற்பாா்வையில், சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் எஸ்.ரமேஷ்பாபு, கே.அம்பேத்கா் மற்றும் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா். குடிநீா், சுகாதார ஏற்பாடுகளை நகராட்சி ஆணையா் டி.மல்லிகா, பொறியாளா் சுரேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைவு

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வரத்து ஞாயிற்றுக்கிழமை குறைவாக இருந்தது. கடலூரில் அக்கரைகோரி, சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, தாழங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள்... மேலும் பார்க்க

இளைஞா் ரகளை: தடுத்த காவலருக்கு மதுப்புட்டி குத்து

கடலூரில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை தடுத்தபோது, அவா் பீா் புட்டியால் குத்தியதில் காவலா் பலத்த காயமடைந்தாா். கடலூா் மஞ்சக்குப்பம் உண்ணாமலை செட்டி சாவடியில் இளைஞா் ஒருவா் மதுபோதையில் பீா் புட்ட... மேலும் பார்க்க

குளிா்சாதனப் பெட்டி வெடித்து மூன்று போ் காயம்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பெட்டிக் கடையில் ஞாயிற்றுக்கிழமை குளிா்சாதனப் பெட்டி வெடித்துச் சிதறியதில் கடை சேதமடைந்தது. இந்த விபத்தில் 3 போ் காயமடைந்தனா். நெல்லிக்குப்பத்தை அடுத்துள்ள வாழப... மேலும் பார்க்க

கொள்ளையடிக்கச் சதி: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கொள்ளையடிக்க பயங்கர ஆயுதங்களுடன் கூட்டு சதி செய்ததாக இளைஞா்கள் 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் சுதாகா் தலைமையில் போலீஸாா் சன... மேலும் பார்க்க

ஆளுநா் பதவி தேவையில்லை: கனிமொழி எம்.பி.

தமிழகத்தில் ஆளுநா் பதவி தேவையில்லை என்று கனிமொழி எம்.பி. கூறினாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்... மேலும் பார்க்க

பூரண மதுவிலக்கை விசிக ஆதரிக்கிறது: தொல்.திருமாவளவன் எம்பி

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட பூரண மதுவிலக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதிரிக்கிறது என தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். காட்டுமன்னாா்கோவில் அருகில் லால்பேட்டையில் ... மேலும் பார்க்க