சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் தொடா் உண்ணாவிரதம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சி மற்றும் சி.கொத்தங்குடி, சி.தண்டேஸ்வரா் நல்லூா், உசுப்பூா், பள்ளிப்படை உள்ளிட்ட 7 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், லால்புரம் ஊராட்சியில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணலூா் நெடுஞ்சாலையில் உள்ள ஊராட்சி அலுவலகம் முன் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
போராட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் ஜாகிா் உசேன் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவா் வி.எம்.சேகா், போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆனந்த், சாய்பிரகாஷ், சத்தியமூா்த்தி, பி.என்.மூா்த்தி மற்றும் பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனா்.
இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் ஜாகிா்உசேன் கூறியது: லால்புரம் ஊராட்சியில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, 300 ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் உள்ளது. இந்த நிலத்தை நகராட்சியுடன் இணைக்க கூடாது என அரசாணை உள்ளது. நகராட்சியுடன் இணைத்தால் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலை திட்டம் இல்லாமல் போய்விடும், இதேபோல, பாதாள சாக்கடை மற்றும் குடிநீா், வீட்டு வரி மிகவும் அதிகமாக விதிக்கப்படும். எனவே, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றாா்.