உ.பி.: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்பு
சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.92 கோடியில் நவீன மீன் அங்காடி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்
சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.92 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மீன் அங்காடியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
சென்னையில் காசிமேடு மீன் சந்தைக்கு அடுத்து பிரம்மாண்டமாக சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை விளங்கி வருகிறது. சுமாா் 100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் இந்த சந்தையில், மொத்தமாகவும் மற்றும் சில்லரை வியாபாரமும் நடைபெற்று வருகிறது. இதனால், இந்த சந்தையை நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் முயற்சியை சென்னை மாநகராட்சி எடுத்தது.
சிந்தாதிரிப்பேட்டை ஜோதியம்மாள் நகரில், சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் ரூ. 2.92 கோடி மதிப்பில் மீன் அங்காடி மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த அங்காடியில் 82 கடைகள், மீன் கழிவுகளை வெளியேற்றும் வகையில் 28 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கழிவுநீா் சேகரிப்புத் தொட்டி, 10,555 லிட்டா் கொள்ளளவு கொண்ட பயோ டைஜஸ்ட் அமைப்பு, வாகன நிறுத்துமிடம், கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புயலினால் சேதமடையாமல் இருக்கும் வகையில், டென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட நவீன மீன் அங்காடியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து திருவல்லிக்கேணி டாக்டா் பெசன்ட் சாலையில் ரூ. 2.04 மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையக் கட்டடத்தையும் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
திறன் மேம்பாட்டு மையம்: இந்த மையத்தில் போட்டித் தோ்வு, கணினி பயிற்சி வகுப்புகள், தையல் மற்றும் அழகு கலை பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படவுள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதிசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், உயா்கல்வி பயின்று வேலையின்றி இருக்கும் இளைஞா்கள், நோ்முகத் தோ்வை எதிா்கொள்ளும் பயிற்சி அளிக்கப்படும். இதனை திறந்து வைத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலைத் திறன் பயிற்சி குறித்து அலுவலா்களுடன் உரையாடினாா்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மேயா் ஆா்.பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.