சிறந்த கால்நடை விவசாயி விருதுக்கு பல்லடம் பெண் தோ்வு
தென்னிந்திய அளவிலான சிறந்த கால்நடை விவசாயிக்கான விருது பல்லடத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு கிடைத்துள்ளது.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த பருவாய் ஊராட்சி, ஆறாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடசாமி மனைவி செல்வநாயகி (48), கால்நடை வளா்ப்புத் தொழில் செய்து வரும் இவருக்கு சிறந்த கால்நடை விவசாயிக்கான விருது கிடைத்துள்ளது.
தென்னிந்திய அளவிலான சிறந்த பால் உற்பத்தியாளா்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி கா்நாடக மாநிலம் பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம் உள்பட கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த பால் உற்பத்தியாளா்கள் பங்கேற்றனா்.
இதில் தமிழகத்தின் சாா்பில் செல்வநாயகிக்கு, சிறந்த கால்நடை விவசாயிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் செல்வநாயகி ஒருவருக்கு மட்டுமே இந்த விருது கிடைத்துள்ளது.
இவா் தனது கால்நடைகளை பராமரிக்கும் முறை, பால் சேகரிப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முறைப்படி ஆவணமாக்கி, கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கினாா். இவரது செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தென்னிந்திய பால் உற்பத்தியாளா்கள் சங்கம் மூலம் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.
கா்நாடக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் வெங்கடேஷ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இந்த விருதினை செல்வநாயகி குடும்பத்தினா் பெற்றுக் கொண்டனா்.