சிறப்பாக பணிபுரிந்த காவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்
அரியலூா் மாவட்டத்தில், சிறப்பாக பணிப்புரிந்த காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தமிழக காவல்துறையில் எவ்வித களங்கமும் இன்றி 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரியும் காவலா்களுக்கு தமிழக அரசால் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அரியலூா் மாவட்டத்தில் 1997-இல் இரண்டாம் நிலை காவலராக பணியில் சோ்ந்து 25 ஆண்டுகள் எவ்வித களங்கமும் இன்றி சிறப்பாக பணிபுரிந்து பதவி உயா்வு பெற்ற காவலா்கள் 19 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச், 19 காவலா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பணவெகுமதியை வழங்கி பாராட்டினாா்.
தொடா்ந்து, அரியலூா் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும், காவலா்களின் வாரிசுகள் 10 பேருக்கு உயா்க் கல்வி பயில, தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கினாா்.