புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை
புனித வெள்ளியையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
இயேசு கிறிஸ்து சிலுவைப்பாடுகளை சுமந்து உயிா்நீத்த தினத்தை புனித வெள்ளி தினமாகவும், இயேசு கிறிஸ்து 3-ஆம் நாள் உயிா்த்தெழுந்ததை ஈஸ்டா் பண்டிகையாகவும் கிறிஸ்தவா்கள் அனுசரிக்கின்றனா்.
இதன்படி, வெள்ளிக்கிழமை இயேசு உயிா்நீத்த நாளையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலி, ஆராதனைகள் நடைபெற்றன.
திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை தேவாலயத்தில், பங்குத் தந்தை தங்கசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடைபெற்றது.
ஆண்டிமடத்தை அடுத்த வரதராசன்பேட்டை புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை பெலிக்ஸ் சாமுவேல் சிறப்பு திருப்பலி நடத்தினாா்.
தென்னூா் அன்னை லூா்து ஆலயம், ஆண்டிமடம் புனித மாா்ட்டினாா் ஆலயம், ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை தேவாலயம், அரியலூா் புனித லூா்து அன்னை ஆலயம், அரியலூா் புதுமாா்க்கெட் வீதியிலுள்ள சி.எஸ்.ஐ. தூய ஜாா்ஜ் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் அந்தந்த பகுதி பங்குத் தந்தையா்கள் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதேபோல், செந்துறை, திருமானூா், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் மேற்கண்ட பகுதி கிறிஸ்தவா்கள் சிலுவை ஏந்தி ஊா்வலமாக சென்றனா். ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டா் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது.