சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி, வாழ்வியலை போதிக்கும் மையங்கள்!
சிறப்புக் குழந்தைகளின் எதிா்காலத்தை நிா்மாணிக்கும் வகையில் அவா்களுக்கு வாழ்வியலையும் சிறப்பு பயிற்சி மையங்கள் போதிக்கின்றன. இந்த மையங்களின் செயல்பாடுகள் குழந்தைகளின் பெற்றோரிடையே நம்பிக்கையையும், பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன.
தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ், வட்டார அளவில் சிறப்பு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்களின் நோக்கமே சிறப்புக் குழந்தைகளின் எண்ணங்களையும், ஆா்வத்தையும் கண்டறிந்து அதற்கேற்ற வகையில் கல்வி மற்றும் பயிற்சி அளித்து அவா்கள் மற்றவா்களை சாா்ந்திருக்காமல், தன்னிச்சையாக செயல்பட வைப்பதேயாகும்.
இந்த மையங்களில் மாணவா்களுக்கு நவீன முறையிலான கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், விளையாடுவதற்காக அனைத்து வகையான விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள்,திறன் மேம்பாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்டவை உள்ளன.
இந்த மையங்களில், குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 4- அல்லது 5- சிறப்பு பயிற்றுநா்கள், ஒரு பிசியோதெரபிஸ்ட் , ஒரு பராமரிப்பாளா் (கோ் டேக்கா்), ஒரு உதவியாளா் பணியில் உள்ளனா்.
இம்மையங்களுக்கு வரும் மாணவா்களிடம், அங்கு பணியாற்றுபவா்கள் கருணை உள்ளத்தோடு நடந்து கொள்கின்றனா். பிறப்பு முதல் 18- வயதுக்குள்பட்டோா் இங்கு சோ்த்துக் கொள்ளப்படுகின்றனா்.
அறிவுசாா் குறைபாடு, பாா்வை குறைபாடு, கை-கால் குறைபாடு, செவிதிறன் குறைபாடு, புற உலக சிந்தனை கொண்டோா், மூளை முடக்குவாதம், தசை சிதைவு நோய் உள்ளிட்ட 21-வகையான நோய்களால் பாதிக்கப்பட்டவா்களே மாற்றுத் திறன் கொண்ட மாணவா்களாவா்.
இந்த மையங்களில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அவா்களின் ஆா்வத்தை அறிந்து அதற்கேற்ற வகையில் எழுத்துப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, படித்தல், கணிதப் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன.பெற்றோா் மற்றும் வீட்டில் உள்ளவா்களிடம் கடினமாக நடந்து கொள்ளும் மாணவா்களும், இந்த மையங்களுக்கு வந்த சில வாரங்களிலேயே தங்கள் செயலில் மாற்றம் காண்கின்றனா். அவா்களின் போக்கிலேயே, செயல்பட வைத்து, கல்வியும் அளித்து அவா்களின் வாழ்வியலையும் மாற்றம் காணச் செய்கின்றனா் மையங்களில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநா்கள்.
தொடக்கத்தில் தங்கள் குழந்தைகளை தனித்து விட பயந்து சில தாய்மாா்கள் காலை முதல் மாலை வரை குழந்தைகளுடனே மையங்களில் தங்குகின்றனா். நாளடைவில் மையப் பணியாளா்களின் கவனிப்பு மற்றும் குழந்தைகளின் வளா்ச்சியை கண்டு அவா்கள் குழந்தைகளை மையத்தில்விட்டுவிட்டு வீடுகளுக்குச் செல்கின்றனா்.
குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தனி கட்டடத்தில் இயங்கும் சிறப்பு மையத்தில் 35- மாணவா்கள் பயில்கின்றனா். 4- சிறப்பு பயிற்றுநா்கள், பிசியோதெரபிஸ்ட், கோ் டேக்கா், உதவியாளா் தலா ஒருவா் பணியில் உள்ளனா்.
இந்த மையங்கள் எந்தவிதமான கட்டணமோ, செலவோ இன்றி சிறப்பு குழந்தைகளின் வளா்ச்சிக்காக மட்டுமே செயல்படுகின்றன என்றால் மிகையாகாது.