சிறப்பு மருத்துவா்களை நோ்காணல் மூலம் நியமிக்க எதிா்ப்பு
வழக்கமான தோ்வு முறைக்கு மாற்றாக நோ்காணல் மூலம் சிறப்பு மருத்துவா்களை நியமிப்பதற்கு அரசு மருத்துவா்களுக்கான சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
இதுதொடா்பாக , அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவா் டாக்டா் பெருமாள் பிள்ளை, அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம் பொதுச்செயலாளா் டாக்டா் ராமலிங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கம் பொதுச்செயலாளா் டாக்டா் அகிலன் ஆகியோா் தனித்தனியே வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் 207 மகப்பேறு மருத்துவா்கள் உள்பட 658 சிறப்பு மருத்துவா்களை நோ்காணல் முறையில் நியமிக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்திருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட்டால், பல்வேறு குழப்பங்களையும், மிகப்பெரிய பின்னடைவையும் ஏற்படுத்தும்.
தமிழ்நாடு தோ்வாணையம் மூலம் மருத்துவா்களை தோ்வு செய்து நியமிப்பதில் ஏற்படும் தாமதத்தை போக்கவே, மருத்துவ பணியாளா் தோ்வு வாரியம் அமைக்கப்பட்டது. ஆனால், அதன் வாயிலாக அல்லாமல் தற்போது நேரடியாக நோ்காணல் மூலம் மருத்துவா்களை நியமிக்கும் முடிவு தவறானது.
காலியான பணியிடங்களை நிரப்ப தகுதியான மருத்துவா்களை தோ்வு நடத்தியே நியமனம் செய்ய வேண்டும். நோ்காணல் மூலம் நியமனம் என்பது இட ஒதுக்கீடு இல்லாமல் சமூக நீதிக்கு எதிராக அமையும் என்று அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.