‘சிறுபான்மையின உரிமைகளை பறிக்கக் கூடிய அரசாணைகள் நீக்கப்பட வேண்டும்’
தூத்துக்குடி: சிறுபான்மையின உரிமைகளை பறிக்கக் கூடிய அரசாணைகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ அருண் தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ அருண் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது இங்கு 29 மாவட்டமாக கள ஆய்வு செய்துள்ளோம். இதில் 839 கோரிக்கை மனுக்கள் பெற்று 661 கோரிக்கைகள் அந்தந்த கூட்டத்திலேயே தீா்வு காணப்பட்டுள்ளது. இதில் 178 கோரிக்கைகள் கொள்கை முடிவு சாா்ந்தது. இதை தமிழக முதல்வருக்கு அறிக்கை சமா்ப்பித்துள்ளோம்.
கல்லறைத் தோட்டம் அமைக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் நியமனம் மற்றும் அங்கீகாரம் வழங்குதல், அங்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீா்வு காணுதல், அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகள், நலத் திட்டங்களும், அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வருக்கு சமா்ப்பித்துள்ளோம்.
தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில், இம்மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரா்களின் வரலாற்றுச் சின்னத்தை புதுப்பிக்க வேண்டும். தொ்மல் பவா் பிளான்ட் கழிவுகள் கடலில் கலக்கப்படுகிறது. இது ஆய்வு செய்யப்பட வேண்டும். மறைந்த ஜி.யூ.போப் பெயரில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனா்.
கல்லறை தோட்டம் கட்டுவதற்கு, புனரமைப்பு மற்றும் பழுது பாா்ப்பதற்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் ரூ.10 கோடியாக உள்ளதை ரூ.30 கோடியாக உயா்த்தி வழங்க கேட்டுள்ளோம். அரசாணைகளில் சிறுபான்மையின் உரிமைகளை பறிக்கக் கூடிய, அவா்களுக்கு எதிராக இருக்கக்கூடிய ஆணைகள் இருந்தால் அதை நீக்கிவிட்டு, சிறுபான்மை பள்ளி, கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.