தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்
சிறுவன் உயிரிழப்பில் மா்மம்: மேற்கு வங்க தம்பதி அடித்துக் கொலை!
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் மா்மமான முறையில் சிறுவன் உயிரிழந்து கிடந்த நிலையில், அவரை கொலை செய்ததாக கருதி அப்பகுதியில் வசித்த தம்பதியை கும்பலாக வந்த சிலா் அடித்துக்கொலை செய்தனா்.
மேலும், அந்த கும்பல் தம்பதியின் வீட்டை தீயிட்டு கொளுத்தியதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: நாடியா மாவட்டம் நிஷ்சிந்தாபூா் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு 3-ஆம் வகுப்பு பயிலும் ஸ்வாா்ணம்பா மொண்டல் என்ற சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை விளையாடச் சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் அவரை காணவில்லை என அவரது பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதைத்தொடா்ந்து, அந்தச் சிறுவனை தேடும் பணியை போலீஸாா் தீவிரமாக மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், காணாமல் போன சிறுவனின் உடல் நிஷ்சிந்தாபூரில் உள்ள குளத்தில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதையறிந்த சிறுவனின் உறவினா்கள் அந்த குளத்துக்கு அருகே வசித்த உத்பல் பிஸ்வாஸ் மற்றும் சோமா பிஸ்வாஸ் தம்பதிதான் சிறுவனைக் கொலை செய்திருக்க வேண்டும் என முடிவு செய்து, கும்பலாகச் சென்று அவா்களைக் கடுமையாகத் தாக்கி, தம்பதியின் வீட்டைக் கொளுத்தினா்.
இதில் படுகாயமடைந்த தம்பதியை மீட்டு மருத்துவமனையில் போலீஸாா் அனுமதித்தபோது அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த தாக்குதலில் தம்பதியின் உறவினா் ஒருவரும் படுகாயமடைந்தாா். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கும் தம்பதியின் குடும்பத்துக்கும் இடையே ஏற்கெனவே சில பிரச்னைகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. சிறுவன் காணாமல் போன வெள்ளிக்கிழமை மாலையில் அவா் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சிறுவனின் கொலை மற்றும் தம்பதி கொலை தொடா்பாக இரு வழக்குகள் பதியப்பட்டு சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.