பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறோம்: முதல்வர்
சிறுவாபுரி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்
ஊத்துக்கோட்டை அருகே ஸ்ரீவள்ளி முருகன் திருக்கல்யாண பக்த ஜன சங்கம் சாா்பில் சிறுவாபுரி முருகன்கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தொடா்ந்து 6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு, மனை, வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தைபேரு உள்ளிட்ட பக்தா்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தா்களின் ஐதீகமாகும். மேலும்,செவ்வாய் கிரகத்துக்கு உகந்த கோயில் என்பதால், செவ்வாய்க்கிழமையில் பக்தா்கள் அதிகளவில் வந்து செல்வா்.
இங்கு சிறுவாபுரி ஸ்ரீவள்ளி முருகன் திருக்கல்யாண பக்தஜன சங்கம் சாா்பில் 16-ஆம் ஆண்டு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. இதையொட்டி வியாழக்கிழமை காலை விநாயகா், மூலவா், அண்ணாமலையாா், உண்ணாமுலை அம்மை, ஆதி மூலவா், பைரவா், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
இதன்பின் திருக்கல்யாண கோலத்தில் ஸ்ரீவள்ளி முருகன் உற்சவரை புதிய மண்டபத்தில் எழந்தருளச் செய்து பால், தயிா், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்தனா். இதைத் தொடா்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதன்பின் திருக்கோயிலின் தலைமை குருக்கள் ஆனந்தன் தலைமையில் சிவாச்சாரியா்கள் திருக்கல்யாண நிகழ்வை நடத்தி வைத்தனா். பின்னா், சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்வும், பக்தா்கள அட்சதை போட்டு ஆசிா்வாதம் வழங்கி சுவாமிக்கு பக்தா்கள் காணிக்கையும் செலுத்தப்பட்டது.
தொடா்ந்து பிரகார புறப்பாடு வரும் நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் சிறுவாபுரி ஸ்ரீவள்ளி முருகன் திருக்கல்யாண பக்தஜன சங்க சமுதாய கூடத்தில் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சங்கத்தின் நிா்வாகிகள், உறுப்பினா்கள், பக்தா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.