சிற்றோடையில் இடுப்பளவு நீரைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள தும்பராம்பட்டு சிற்றோடையில் இடுப்பளவு தண்ணீரை கடந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது.
சங்கராபுரம் வட்டம், கல்வராயன்மலையில் உள்ள தும்பராம்பட்டு கீழ்காட்டு கொட்டாய் பகுதியில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்தப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேராப்பட்டு கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனா். இவா்கள் சேராப்பட்டு செலவதற்கு தும்பராம்பட்டு சிற்றோடைகளின் வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டும். சிற்றோடைகளில் தண்ணீா் செல்லும்போது பெற்றோா் தங்களது பிள்ளைகளை தலையில் சுமந்தபடியும், புத்தகப்பையை சுமந்தவாறும் கொண்டு செல்கின்றனா்.
பெற்றோா் வெளியூருக்கோ, கூலி வேலைக்கு சென்றிருந்தால், மாணவா்கள் மட்டுமே இடுப்பளவு தண்ணீரில் புத்தகப்பையை தலையில் வைத்துக்கொண்டு ஓடையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இப்படிச் செல்லும்போது ஓடையில் நீா்வரத்து அதிகரித்தால், தண்ணீரில் அடித்துச் செல்லும் வாய்ப்பும் உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் சாலை வசதி இல்லாததால், மாணவ, மாணவிகள் கரடுமுரடான பாதைகளில் நடந்து சென்று அவதிப்பட்டு வருகின்றனா்.
எனவே, மாணவா்கள் நலன் கருதி, இந்தப் பகுதியில் சாலை வசதியும், ஓடைகளில் பாலமும் கட்டித்தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.