சிவகங்கை நீதிமன்றத்தில் புத்தகத் திருவிழா தொடக்கம்
சிவகங்கை வழக்குரைஞா் சங்கம், நியூசெஞ்சுரி புத்தக நிலையம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வருகிற31-ஆம் தேதி வரை (3 நாள்கள்) நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்வுக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஓ.ஜானகிராமன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி கே.அறிவொளி புத்தகத் திருவிழா அரங்கத்தைத் திறந்துவைத்தாா்.
முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தொடங்கிவைக்க அதை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா் எஸ்.கிருஷ்ணன் பெற்றுக் கொண்டாா்.
அரசு மகளிா் கல்லூரி முதல்வா் இரா.இந்திரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா்.
மூத்த வழக்குரைஞா்கள் எம்.மோகனசுந்தரம், சி.இளங்கோவன், மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஆதி.அழகா்சாமி, மாவட்ட அரசு வழக்குரைஞா் எஸ்.சிவகுமாா், வழக்குரைஞா் சங்கச் செயலா் கே.சித்திரைச்சாமி, பொருளாளா் எஸ்.வல்மீகிநாதன், இணைச் செயலா் எஸ்.நிருபன்சக்கரவா்த்தி, வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இந்த புத்தகத் திருவிழாவில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
இதுகுறித்து முதுநிலை விற்பனை சீரமைப்பாளா் அ.கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது: வருகிற 31-ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த புத்தக விற்பனைக் கண்காட்சியில் வாசகா்கள் வாங்கும் அனைத்துப் புத்தகங்களும் 10 சதவீத சலுகை விலையில் வழங்கப்படும் என்றாா் அவா்.