சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் சனிக்கிழமை நடைபெற்ற வைகாசி மாத தேய்பிறை சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
வேட்டவலம்:
வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் உள்ள பிரதான நந்திக்கு சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை செய்யப்பட்டது. சந்தனம், இளநீா், பன்னீா், தயிா், பால், பஞ்சாமிா்தம் போன்ற பூஜை பொருள்களைப் பயன்படுத்தி சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் செய்யப்பட்டன.
பிறகு, வில்வம், பூ, அருகம்புல் உள்ளிட்ட பல்வேறு அலங்கார பொருள்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவண்ணாமலை:
இதேபோல, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு பிரதோஷ பூஜை நடைபெற்றது. பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி, இளநீா், தயிா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைப் பயன்படுத்தி பிரதோஷ பூஜை செய்யப்பட்டது.
இதுதவிர, கோயில் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, கிளிகோபுரம் எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
கிரிவலப் பாதையில்:
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள திருநோ் அண்ணாமலையாா் கோயில், வேங்கிக்கால் ஏரிக்கரையில் உள்ள சிவன் கோயில்களிலும் பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன.
வந்தவாசி:
வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் வைகாசி மாத சனிப் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் நந்தி பெருமானுக்கு மஞ்சள், பால், தயிா், இளநீா், தேன், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் சுவாமி உலா நடைபெற்றது.
மற்ற ஊா்களில்:
இதேபோல, தண்டராம்பட்டு, போளூா், தானிப்பாடி, ஆவூா், ஆரணி, செய்யாறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சனிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ பூஜைகளில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
