கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
``சிவராத்திரிக்கு தமிழ்நாட்டில் இருக்க மாட்டேன்; சிவன் எழுத்தைப் பார்க்கப் போறேன்" - நடிகை மதுமிதா
'சின்ன பாப்பா பெரிய பாப்பா' உள்ளிட்ட சில டிவி நிகழ்ச்சிகளிலும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' முதலிய சில படங்களிலும் நடித்தவர் நடிகை மதுமிதா. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர். நடிப்பு தாண்டி ஆன்மிகத்தில் இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. தீவிரமான சிவ பக்தை. முன்பொருமுறை நம்மிடம் பேசிய போது,
'நகைச்சுவை நடிகர் நந்தகுமாரை தெரியுமில்லையா, மறைந்த விவேக் சார் ஒரு காமெடியில் 'அண்டங்காக்கா எனக் கேலி செய்வாரே, அவர்தான். அவர்கிட்ட இருந்து அன்பளிப்பாக ஒரு சிவபுராண புத்தகம் எனக்குக் கிடைத்தது. யாருக்கோ அவர் தந்தது, கை மாறி கை மாறி கடைசியில் என் கைக்கு வந்தது. அந்தப் புத்தகத்தில் ‘கோளறு பதிகம்’ன்னு சில பாடல்கள். வார்த்தைகளெல்லாம் ரொம்ப கடினமானதா இருந்தது. சிவனை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய அந்தப் பாடல்களைப் புரட்டிட்டு ‘ஒண்ணும் புரியலை’ன்னு தூக்கி ஓரமா வச்சிட்டேன்.

ஆனா அந்தப் புத்தகம் என் வீட்டுக்கு வந்த பிறகு என் நடவடிக்கைகளில் அப்படியொரு மாற்றம். அதுவரை அம்மா பூஜையறையை சுத்தம் செஞ்சு விளக்கேத்த சொன்னா பண்ண மாட்டேன். ஆனா, அந்த நிலை அப்படியே மாறியது.
‘திடீர்னு எப்படி மாறினேன்’னு என் மனசு யோசிக்கிறப்பெல்லாம் இந்தப் புத்தகம் கண்ணில் படும். மறுபடி எடுத்து, புரியவில்லை என்றாலும் வார்த்தைகளை வாசிப்பேன். அந்த நேரத்தில்தான் ‘காஸ்மோரா’ சூட்டிங் வந்தது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்ல விவேக் சார்கிட்ட இருந்து நிறைய ஆன்மிக விஷயங்கள் கத்துக்கிட்டேன். ‘எல்லா நாளும் நல்ல நாளே; கோள்கள் லாம் நமக்கு நன்மை செய்பவைதான்’னு கோளறு பதிகத்தை எளிமையா புரியவைத்தார்.
அப்ப இருந்து வாழ்க்கையில் எந்த முடிவு என்றாலும் சிவனைக் கேட்டு செய்கிறேன். என்னுடைய கல்யாணத்தையே உதாரணமா சொல்லலாம். ரொம்ப வருஷமா பேசாம இருந்த இரண்டு குடும்பங்கள். கணவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர். ‘இது சரிப்பட்டு வருமா’னு திருவண்ணாமலையில் பூ போட்டுக் கேட்டேன். பூ எடுத்த அர்ச்சகர் பேரு பிரகதீஷ். சிவன் நாமம். பூ சாதகமாகக் கிடைத்தபோது, ‘என் கல்யாணத்துல சிவனே உன்னைப் பார்க்கணும்’னு வேண்டிக்கிட்டேன். சரியா, கல்யாணத்து அன்னைக்கு அருணாசலேஸ்வரர் ஃபோட்டோவுடன் அந்த அர்ச்சகரே நெத்தி நிறைய திருநீற்றுடன் வந்தார். இத்தனைக்கும் அவருக்கு நான் அழைப்பிதழே தரல. இதை என்னவென்று சொல்வது... எல்லாம் சிவனுடைய மகிமைதான்'' எனக் கூறியிருந்தார்.
ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி தினத்தில் ஏதாவதொரு சிவன் கோயிலில் தங்குவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர் இந்தாண்டு எங்கு செல்லவிருக்கிறார் என அறியத் தொடர்பு கொண்டோம்.
''சென்னையிலுள்ள எல்லா சிவன் கோயில்களுக்கும் போயாச்சு. அதனால இந்தாண்டு சிவாராத்திரிக்கு தமிழ்நாட்டுல இருக்க மாட்டேன். பாண்டிச்சேரி. அங்க அம்பலத்தடியார் மடம்கிற இடம். சித்தர் பூமி. அந்த இடத்துல எழுந்தருளியிருக்கிற லோகநாயகி சமேத நாகலிங்கேஸ்வரரைத்தான் இந்த வருஷம் பார்க்கப் போறேன். ரொம்ப நாளா போக நினைச்சுக்கிட்டிருந்த இடம். ஏனோ தெரியல, அந்த ஆசை நிறைவேறாமலேயே இருந்த சூழல்ல இந்த வருஷம் ஈசன் என்னை அழைச்சிட்டார்.
சிவனே கைப்பட பனை ஓலையில எழுதின திருவாசகத்தை இங்க வருடத்துக்கு ஒரு முறை அதாவது சிவராத்திரி அன்னைக்கு மக்கள் பார்வைக்கு வைக்கிறாங்களாம். அன்னைக்கு கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும்னு சொல்றாங்க. அதனால நாளைக்கு காலையிலயே கிளம்பி போயிடலாம்னு இருக்கேன். இரவு கோவில்ல தங்கி அப்பனைத் தரிச்சிட்டு வரலாம்னு இருக்கேன்'' என்றபடியே சிவன் தரிசனத்துக்குத் தயாராகிறார்.