7 முதல் 3 மணி வரை விடாத போன் கால்; ஓட்டமெடுத்த தேர்தல் அலுவலர்; செய்தி வாசிப்பாளர் சங்கப் பஞ்சாயத்து
சுமார் 500 பேர் உறுப்பினர்களாக இருக்கும் தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தல் இம்மாதக் கடைசியில் நடக்கவிருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது.
தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக சௌதாமணி, டி.எஸ்.எம். முருகானந்தம் இருவரும் நியமிக்கப்பட்டனர். இவர்களில் சௌதாமணி பாரதிய ஜனதா கட்சியில் செயல்பட்டு வருபவர். தவிர சர்ச்சைக்குரிய பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்டு சிறைக்கும் சென்று வந்தவர். எனவே இவரது நியமனத்துக்கு உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் மற்றொரு தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்டு வந்த முருகானந்தம் தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
''சங்கத்தின் பொதுக்குழு முடிவு என அறிவித்ததால் சங்க நலன் கருதி இந்தப் பணியைச் செய்து தர சம்மதித்தேன். ஆனால் பொறுப்பேற்றது முதல் இந்த நிமிடம் வரை ஏன் இந்தப் பொறுப்பை ஏற்றோம் என வருந்துமளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வருகின்றனர். பல கேள்விகளைக் கேட்ட அவர்களுக்கு நானும் முடிந்த அளவு பதிலைப் பொறுமையாகத் தந்தேன். கடந்த பத்து ஆண்டுகளாக இருந்த சங்க நிர்வாகம் தொடர்பாக இந்தப் பொறுப்புக்கு வந்த பத்தே நாட்களில் எவ்வளவு ஆராய்ந்து பதில் தர முடியுமோ அவ்வளவு பதில்களைத் தந்தேன்.

இதில் உறுப்பினர்களிடம் பாரபட்சமின்றியே செயல்பட்டு வந்தேன். ஒருவழியாக வேட்பு மனுதாக்கல் முடிந்தது. அதன் பின் சுமார் பத்து பேர் திரண்டு வந்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விகளுக்கும் பதில் தந்தேன். எல்லாம் முடிந்த பிறகு கடைசியில் சிலர் நாங்கள் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். வக்கீல் நோட்டீஸில் கையொப்பமிட்டிருக்கும் சிலர் என்னிடமே வேட்பு மனு வாங்கித் தாக்கல் செய்தவர்கள் என்பதுதான் ஹைலைட். வேட்பு மனுவைத் தாக்கல் செய்து விட்டு நான் நியமிக்கப்பட்டதே செல்லாது என எப்படிச் சொல்கின்றனர் தெரியவில்லை.
மொத்தத்தில் இந்தப் பொறுப்பை ஏற்ற நாள் முதல் தொடர்ச்சியாக கடும் மன உளைச்சலையே சந்தித்து வந்ததால் தொடர்ந்து இந்தப் பொறுப்பை ஏற்று நடத்த இயலாத நிலையில் பொறுப்பிலிருந்து விலகுகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு. இது தொடர்பாக துணைத் தேர்தல் அலுவலரிடம் நான் எதுவும் பேசவில்லை'' என விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் முருகானந்தம்.