சிவ (நவ) தாண்டவம்
நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை தாண்டவம் ஆடினாராம் சிவபெருமான். இந்தத் தாண்டவங்களிலிருந்து நவ துர்கை தோன்றியதாக ஞான நூல்கள் விவரிக்கின்றன.
ஆனந்த தாண்டவம்: வலக்காலை ஊன்றி, இடக்காலைத் தூக்கி சிவனார் ஆடிய ரிஷி மண்டல கோலத்தில் தோன்றியவள் ஸ்ரீ சைலபுத்திரி.
சந்தியா தாண்டவம்: பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் இடக்கால் விரலால் சிவனார் இடும் கோலம் சப்த ஒலிக் கோலம். இதிலிருந்து தோன்றியவள் கூஷ்மாண்டா.
திரிபுர தாண்டவம்: ஈசனின் இடக்கால் பெருவிரலால் வரையப்பட்டது அஷ்ட வகை கோலம். இதில் தோன்றியவள் பிரம்மசாரிணி.
ஊர்த்துவ தாண்டவம்: திருவாலங்காடு தலத்தில் தன்னுடன் ஆடிய காளியைத் தோற்கடிக்க சிவனார் ஆடிய தாண்டவம். ஒரு காலை தரையில் ஊன்றி மறுகாலை தோளுக்கு இணையாக உயர்த்தி சிவனார் ஆடிய இந்த பிரணவ கோலத்தில் இருந்து தோன்றியவள் சந்திர காந்தா தேவி.
புஜங்க தாண்டவம்: பாற்கடலின் ஆலகால விஷத்தை சிவனார் அருந்த, அவரின் கழுத்தைப் பிடித்து, விஷம் உள்ளே இறங்காமல் தடுத்தார் பார்வதி. இதனால் ஈசனுக்கு நீலகண்டன் என்னும் பெயர் உண்டு. அப்போது ஏற்பட்ட புஜங்க தாண்டவத்தில் தோன்றியவள் ஸ்கந்த மாதா.
முனி தாண்டவம்: பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, சிவனார் ஆடிய ஆட்டம். அப்போது நெற்றிக் கண்ணில் தோன்றியவள் காத்யாயினி.
பூததாண்டவம்: கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம். இந்தக் கோலத்தில் தோன்றியவள் காலராத்திரி.
சுத்த தாண்டவம்: தண்டகாரண்ய முனிவர்களின் அல்லல்கள் நீங்க அசுரர்களை அழித்து ஆடிய ஆட்டம் . இதில் தோன்றியவர் மகாகெüரி.
சிங்கார தாண்டவம்: நவரசங்களையும் வெளிப்படுத்தும் சிவ நடனம். இந்த நவரசக் கோலத்தில் தோன்றியவள் சித்திராத்திரி.
மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.