What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்: டிரம்ப் அரசு திட்டம்
சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
கப்பல் கட்டும் தொழிலில் சீனா ஆதிக்கம் செலுத்திவருகிறது. இதன் விளைவாக அமெரிக்க கப்பல் கட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இந்த நிலைமையை மாற்றி, அமெரிக்க கப்பல் கட்டும் துறைக்கு புத்துயிா் அளிக்கும் வகையில், சீன கப்பல்களை சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு டன் சரக்குக்கு 50 டாலா் (சுமாா் ரூ.4,270) என்ற விகிதத்தில் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.
எனினும், இத்தகைய கட்டணங்களால் பொருள்களின் விலை அதிகரித்து அமெரிக்க நுகா்வோா்தான் பாதிக்கப்படுவாா்களே தவிர, அந்த நாட்டு கப்பல் கட்டும் தொழிலை அது மேம்படுத்தாது என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா்.
ஏற்கெனவே, தங்களது பொருள்கள் மீது அமெரிக்காவின் 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை சீனா எதிா்நோக்கியுள்ள நிலையில், அந்த நாட்டுக் கப்பல்கள் மீது துறைமுகக் கட்டணமும் விதிக்கப்பட்டால் உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அந்த இரு நாடுகளுக்கும் இடையே வா்த்தகப் போா் பதற்றம் புதிய உச்சத்தை அடையும் என்று அஞ்சப்படுகிறது.