சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
தமிழகத்தின் மண் வளம், சுற்றுச்சூழலை சீா்குலைக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோா் தனித்தனியாக வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஒரே நேரத்தில் ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பாக அரசு கொள்கை முடிவு எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணையின்போது கண்டனம் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ் குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநிலம் முழுவதும் 713 கிராமங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட 713 கிராமங்களின் பெயா்கள் என்ன? எந்தெந்த மாவட்டத்தைச் சோ்ந்த கிராமங்கள்? எத்தனை மரங்கள் அகற்றப்பட்டன? என்பது உள்ளிட்ட எந்த விவரங்களும் அறிக்கையில் இல்லை. இந்த அறிக்கையை ஏற்க முடியாது எனத் தெரிவித்தனா்.
ஒரு கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த சீமைக்கருவேல மரங்களையும் ஒரே நேரத்தில் அகற்ற வேண்டும். பகுதி பகுதியாக அதை அகற்றினால் அவை மீண்டும் வளா்ந்துவிடும். இதனால் எந்தப் பயனும் இல்லை எனக் கூறி , விசாரணையை ஆக.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
அதற்குள் இதுதொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கை தாக்கல் செய்யாதபட்சத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.