ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!
ராகுல் காந்திக்கு 7 நாள் கால அவகாசம் விதித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை வாக்காளா்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிா்க்கட்சிகள் இன்ரிலிருந்து தொடங்கியுள்ளன.
இதனிடையே, புது தில்லியில் இன்று(ஆக. 17) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்திருப்பதாவது:
"பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) அவசரகதியில் ஏன் மேற்கொள்ளப்பட்டது என்று சிலர் தவறாக மேற்கோள் காட்டி வருகிறார்கள். வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டுமா அல்லது அதற்குபின்னர் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட வேண்டுமா?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும், வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும். இது தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ கடமையாகும்.
இந்தநிலையில், இப்போது ஒரு கேள்வி எழும், தேர்தல் ஆனையத்தால் பிகாரின் 7 லட்சம் வாக்காளர்களையும் சென்றடைந்து சரிபார்க்க முடியுமா? என்பதே அது. உண்மை என்னவென்றால், கடந்த ஜூன் 24-ஆம் தேதியே இதற்கான பணிகள் ஆரம்பமாகிவிட்டன. ஜூலை 20-இல் இந்தப் பணிகள் நிறைவுற்றன”.
”ஆக்ஸ்ட் 1-ஆம் தேதிக்கு பின், தேர்தல் ஆணையத்தின் தினசரி அறிக்கைகள் வெளியான பின், இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் ஒரு ஆட்சேபணைக்கூட தெரிவிக்கவில்லை. இதிலிருந்து ஒன்றை அறியலாம்: வரைவு வாக்காளர் பட்டியல் சரியாக இருக்கிறது.
செப்டம்பர் 1 வரை தேர்தல் ஆணையம் காலக்கெடுவும் அளித்துள்ளது. அதுவரை வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒருவேளை, செப்டம்பர் 1-ஆம் தேதிக்குப் பின்பும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டால் அதற்கு யார் பொறுப்பாக முடியும்?
ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கும் இன்னும் 15 நாள்கள் கால அவகாசம் இருக்கிறது என்பதை தெரிவிக்கிறோம். இத்தருணத்தில், செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் வரைவு வாக்களர் பட்டியலில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டும்படி 12 அரசியல் கட்சிகளையும்(தேசிய, மாநில கட்சிகள்) ஊடகம் மூலமாக கேட்டுக்கொள்கிறோம். அதனை சரிசெய்ய தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது”.
“இந்த நாட்டில் பல மக்களுக்கு வீடுகள் இல்லை. ஆனால் அவர்களது பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்கள் எந்த விலாசத்தை அதில் குறிப்பிட்டுள்ளனர்? அவர்கள் இரவில் எங்கு படுத்து உறங்குவார்களோ அந்த இடத்தையே முகவரியாக மாற்றிவிட்டனர். அது, சாலையோரமாக இருக்கலாம், பாலங்களின் கீழ் இருக்கலாம்...
அப்படிப்பட்டவர்களை, போலியான வாக்காளர்கள் என்று குறிப்பிட்டால், நம் நாட்டின் ஏழை சகோதர, சகோதரிகள் நிலைமையை எள்ளி நகையாடுவது போல் ஆகிவிடும்.
இந்த நாட்டில், கோடிக்கணக்கான மக்களின் வீட்டு முகவரிகளில் தனியாக ‘எண்’ குறிப்பிடப்பட்டிருக்காது. இதற்கு என்ன காரணம்? சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அல்லது நகராட்சி நிர்வாகம் அந்த மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் இருப்பிடங்களுக்கு முகவரி வழங்கவில்லை. நகரங்களில், அவர்கள் அங்கீகாரமில்லாத இடங்களில் வசிக்கிறார்கள். அப்பட்டிப்படவர்கள் வாக்காளர் பட்டியல் படிவத்தில் எந்த விலாசத்தை குறிப்பிட முடியும்?
இதையடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவுறுத்தலின்படி, இதைப்போன்ற வாக்காளர் எவரேனும் இருந்தால், அவர்களுக்கு துணையாக தேர்தல் ஆணையம் இருக்கிறது. அவர்களுக்கென அடையாள எண்ணும் வழங்கப்படுகிறது. ’அந்த மனிதர் வாக்காளர் இல்லை’ என்று நீங்கள் அவருக்கான முகவரியில் ’பூஜ்ஜியம்’ என்று இருப்பதைப் பார்த்து நினைத்துக்கொள்ள வேண்டாம்.
ஒரு வாக்காளராக பதிவு செய்ய உங்கள் விலாசம் முக்கியமல்ல. குடியுரிமைதான் முக்கியத்துவம் பெறுகிறது. 18 வயது நிரம்பியிருந்தால்போதும். உங்கள் வசிப்பிடங்களுக்குள்பட்ட வாக்குச்சாவடிக்கென(பூத்) வரையறுக்கப்பட்டுள்ள பகுதியில் வசித்தால் போதும்” என்றார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு விவகாரத்தைப் பற்றிய கேள்விக்கு, “இன்னும் 7 நாள்களுக்குள் அவர் விளக்கமளித்து முறையாக ஆவணத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும். அதைத் தவிர வேறு வழி இல்லவே இல்லை. இல்லையேல், இதன்மூலம், இதுவரை தெரிவிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும்(வாக்குத் திருட்டு உள்பட) அடிப்படை ஆதாரமற்றவை என்பது தெளிவாகிவிடும். மேற்கண்ட குற்றச்சாட்டுகளைச் சுமத்தியவர்கள் யாராயினும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்” என்றார்.