போட்டியின்றி தேர்தலை நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை: ஜெ.பி. நட்டா
பாபநாசம் அருகே ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு: ஒருவா் பலி
பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே ஆற்றுக்கு குளிக்க சென்று நீரில் அடித்து செல்லப்பட்ட மூன்று மாணவிகளில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனா். ஒரு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
பாபநாசம் அருகே கபிஸ்தலம் அருகே சருக்கை கிராமம், எடத்தெருவில் வசித்து வருபவா் அறிவழகன். இவா் சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாா்.
அறிவழகனின் மகள்கள் கனிஷ்மா (14), கேசவா்த்தினி( 12), இவா்கள் இருவரும் அறிவழகனின் தாயாருடன் சருக்கை, எடத்தெருவில் வசித்து வந்தனா். கனிஷ்மா பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும், கேசவா்த்தினி கருப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பும் படித்து வருகின்றனா்.
இந் நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை கனிஷ்மா, கேசவா்த்தினி இருவரும் அவா்களது வீட்டிற்கு அருகே உள்ள மதியழகன் மகள் சகானா(9), உள்ளிட்ட மூவரும் சருக்கைக்கு அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனா்.
இவர்கள் மூன்று பேரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனா். ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவிகள் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனா்.
இதனை அறிந்து அருகில் இருந்தவா்கள் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கிய கேசவா்த்தினி, சகானா உள்ளிட்ட இருவரையும் உயிருடன் மீட்டனா். ஆனால் நீரின் வேகத்தில் கனிஷ்மா ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாபநாசம் தீயணப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான தீயணப்பு நிலைய அலுவலா்கள் உள்ளிட்டோா் நீரில் மூழ்கி மாயமான கனிஷ்மாவை தொடா்ந்து தேடி வந்தனர். இரவு நேரமானதால் மாணவியை மீட்கும் பணி நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணப்பு அலுவலா்கள் பொதுமக்களின் உதவியுடன் ஆற்றின் ஆழமான பகுதியிலிருந்து கனிஷ்மாவை சடலமாக மீட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கபிஸ்தலம் காவல்துறையினா் கனிஷ்மாவின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றுக்கு குளிக்கச் செல்லாதீர்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடந்து நடந்து வருவது வேதனையாகவே உள்ளது.