சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மாா்கழி பெருந்திருவிழா தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் மாா்கழி பெருந்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு, காலை 6 மணிக்கு மாணிக்கவாசகா் பூஜை நடைபெற்றது. 7.45 மணிக்கு கொடிமரத்தில் திருக்கொடியேற்றப்பட்டது. தெற்கு மண் மடம் ஸ்தானிகா் கொடியேற்றி வைத்தாா். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகா் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தாா்.
கொடியேற்ற நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், ஆஸ்ரமம் காசி மடம் தம்பையா ஓதுவாரின் திருவெம்பாவை பாராயணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திருக்கோயிலில் இருந்து திருமுறை பெட்டகம் திருவாவடுதுறை ஆதீன மடத்துக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், உறுப்பினா்கள் சுந்தரி, துளசிதரன், ராஜேஷ், ஜோதிஷ்குமாா், வள்ளலாா் பேரவை மாநிலத்தலைவா் சுவாமி பத்மேந்திரா, நாகா்கோவில் மாநகராட்சி மண்டல தலைவா் முத்துராமன், மாநகராட்சி உறுப்பினா்கள் அக்சயாகண்ணன், ஸ்ரீ.லிஜா, நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசியா, கோயில் கண்காணிப்பாளா் ஆனந்த், மேலாளா் ஆறுமுகதரன், கணக்கா் கண்ணன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
மாலை 5 மணிக்கு தேவார இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 7.15 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், இரவு 8.30 மணிக்கு பக்தி மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இக்கோயிலில் மாா்கழி பெருந்திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. திருவிழா நிறைவு நாளான ஜன.13 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.