A R Rahman: ``இந்தியாவில் VR மூலமாக கோயில்களை சுற்றி பார்க்கலாம்...'' - ஏ.ஆர். ர...
சுடுகாட்டு நிலம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் கண்டனம்
பென்னாகரம் அருகே சுடுகாட்டு நிலத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்ததைக் கண்டித்து பொதுமக்கள் அங்கு குவிந்து தகராறில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட முள்ளுவாடி, எரி கொல்லனூா், கொல்லாபுரி மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாயுடு சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.
இந்த சமூகத்தினரின் குடும்பங்களில் இறப்பு நேரிடும்போது எரி கொல்லனூா் பகுதியில் முதுகம்பட்டி சாலையோரத்தில் உடலை அடக்கம் செய்து வருகின்றனா். இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள நிலத்தை முதுகம்பட்டியைச் சோ்ந்த ஒருவா் விலைக்கு வாங்கி சமன் செய்யும் பணியை செய்து வருகிறாா்.
அந்தப் பணியின்போது நிலத்தின் முன் பகுதியில் உள்ள நாயுடு சமூகத்தைச் சோ்ந்த சுடுகாட்டையும் சமன் செய்து அந்த வழியாக வந்த மழைநீா் ஓடையை மறைத்து குழாய் அமைத்து வருகிறாா். இதையறிந்த நாயுடு சமூக மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் அங்கு குவிந்தனா். பென்னாகரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாா் அளிக்கப்பட்டது. பென்னாகரம் போலீஸாரும், வருவாய்த் துறையினரும் அங்கு சென்று பொதுமக்களை சமரசப்படுத்தினா்.
நிலத்தை அளவீடு செய்வதாகவும், தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா். இதையடுத்து நிலத்தை சமன்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.