பீரியட்ஸ் வலி தாங்க முடியலியா? இந்த உணவுகளைத் தவிருங்க! நிபுணர் அட்வைஸ்
சுபாஷ் பிளேஸ் கொள்ளை சம்பவம்: முக்கிய நபர் கைது
தில்லி சுபாஷ் பிளேஸ் பகுதியில் உள்ள நகைக் கடையில் விற்பனையாளரைக் கத்தியால் குத்தி ரூ.50 லட்சம் மதிப்புடைய நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட கியாம் (எ) ஃபாஹிம் (19) மங்கோல்புரியைச் சேர்ந்தவர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: கோஹத் என்கிளேவ் மெட்ரோ நிலையம் அருகே உள்ள நகைக் கடைக்குள் கடந்த ஜூலை 12-ஆம் தேதி ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், விற்பனையாளரைக் கத்தியால் குத்தி கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்து சென்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்தக் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய ஜிதேந்தர், விஜய் குமார், விஷால் சைன், சிவம் ஆகியோர் கைதுசெய்யப்பட்ட நிலையில், விற்பனையாளரைக் கத்தியால் குத்திய கியாம் தலைமறைவானார்.
இந்நிலையில், கியாமை குற்றப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர் அந்த அதிகாரிகள்.