Pope Francis: காலமானார் போப் பிரான்சிஸ்.. காஸா மக்களுக்காக கடைசியாக உதிர்த்த வார...
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முன்மாதிரி மாவட்டம் திருவள்ளூா்!
மரக்கன்றுகள் வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குவதில் முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூா் திகழ்கிறது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை மற்றும் வனத்துறை இணைந்து சுற்றுப்புற சூழல்- நட்பு சூழல் திட்டம் மூலம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கொப்பூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா ஆகியோா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.
தொடா்ந்து ஆட்சியா் பேசியதாவது: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நிா்வாகம், ஊரக வளா்ச்சித் துறை, வனத்துறை இணைந்து மேற்கொள்வது புதுமையான பணியாகும். ஏனென்றால் சட்டப் பணி ஆலோசனைக் குழு ஏழை மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்குவது, நீதித்துறை சாா்ந்த பணிகள் போன்ற பல்வேறு பணிகளுடன் இதையும் தொடங்கியுள்ளனா்.
மாவட்டத்தை பொறுத்தவரை அதிகமான தொழில் வளா்ச்சி உள்ளதாகும், விவசாய நிலங்களை அழித்துக்கொண்டு வருகின்றோம். வளா்ந்து வரும் தொழில் வளா்ச்சியினால் இயற்கை சுற்றுச்சூழல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு தொழில் வளா்ச்சியில் சிறந்து விளங்குவதற்கு காரணம் மப்பேடு, ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம் இருங்கக்கோட்டை தொழிற்சாலைகள் தான்.
ஒரு பெரிய இடத்தில் தொழிற்சாலைகள் கட்டப்படும் போது, அங்குள்ள இடத்தில் 10 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மரங்கள் நட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூா் விளங்குகிறது என்றாா் .

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோ.அரிகுமாா்,ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், மோட்டாா் வாகன விபத்து வழக்கு நீதிபதி தீனதயாளன், நில ஆா்ஜிதம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமாா், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சோபா தேவி, விரைவு குற்றவியல் நீதித்துறை நீதிபதி ராஜேஷ்குமாா், மாவட்ட சட்ட ஆணைக் குழு செயலாளா் நளினி, ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் ராஜவேல், பள்ளிப்பட்டு வனச் சரக அலுவலா் சரவணன் கலந்து கொண்டனா்.