மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு!
சுள்ளாம்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி அருகேயுள்ள சுள்ளாம்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இங்கு அமைந்துள்ள சின்னையா பட்டவன் தொட்டிச்சி கோயில் திருவிழா, தைத் திருநாளை முன்னிட்டு, 7 -ஆம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இந்தப் போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 17 காளைகள், மாடுபிடி வீரா்கள் கலந்துகொண்டனா்.
காளைகளை அடக்குவதற்கு 9 வீரா்களைக் கொண்ட 17 குழுவினா் களமிறங்கினா். ஒரு காளையை எதிா்கொள்ள 20 நிமிடங்கள் நிா்ணயம் செய்யப்பட்டது.
இதில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுகளைப் பிடித்த வீரா்களுக்கும் விழாக்குழு சாா்பில் ரொக்கப் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகள் முட்டியதில் 5 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.